நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கோயில் குளத்தின் 
கீழ் கரையில் 
சில உடைந்த 
ஒற்றை உபயோக 
நெகிழி குவளைகள்.. 
சிதறியிருந்த
சில முறுக்குத் துண்டுகளும்
உடைந்த பாதி கடலை பருப்பும்..
பாட்டில்கள் எதையும் காணவில்லை..
ஆனாலும்
அவைகள் சொன்ன சேதி
யாரோ பிறந்திருக்கிறார்கள்.. நேற்றிரவு...
சில அழிவுகளை நினைவு கூர்ந்து..!!!
மனைவிக்கான 
பல முத்தங்களை 
மதுக்குவளைகள் விழுங்குகிறது... 
மனைவியின் 
பல முத்தங்களை 
மது வாசனை 
விரட்டி அடிக்கிறது...
கன்று 
வேகமாய் மடி முட்டும்போது 
வலிக்கிறது.. 
தலை பிரசவத்தில் 
குழந்தையை பறிகொடுத்த 
தாயின் மார்பு...
உன் ஒற்றை பிம்பம் தெரிந்த 
என் இதயக்கண்ணாடியை 
சில்லுகளாய் சிதற வைத்தாய்.. 
அதனாலென்ன .. 
இப்போது பார்.. 
எல்லா சில்லுகளிலும் 
நீதான் தெரிகிறாய்...
பாடம் செய்யப்பட்ட 
சிட்டுக்குருவிகள்.. 
செல்போன்கள்..!!!
*******************
நினைவுத் தூண்களை 
எழுப்பிவிட்டு
ஒரு இன அழிப்பு..
செல்போன் டவரும்
சிட்டுக்குருவி இனமும்...

மர இலைகளில் 
காத்திருக்கிறது மழை.. 
பள்ளி குழந்தைகள் 
வீடு திரும்பும் போது 
மீண்டும் பெய்வதற்காக..!!!.
உன் வீட்டு வாசலில்
நீ பூக்கோலம் போடும் வரை 
எனக்கும் 
காரணம் தெரியாமல்தான் 
இருந்தது.. 
இந்த பூமிக்கு ஏன்
பூகோளம் என
பெயர் வந்ததென்று...!!!

சனி, 21 ஏப்ரல், 2012

வரிசையாய் நின்று 
கை கூப்பி 
கண் மூடி 
பாடலினூடே ஆடி 
முன் நிற்பவனின் முதுகில் முட்டி 
அர்த்தம் தெரியாமல் நடந்த
பள்ளியின் காலைநேர பிரார்த்தனை
நேரடியாய்
கடவுளின் காதுகளில்
கேட்டிருக்க கூடும் ...
மகிழ மரத்தின் பூ ஒன்று
தலையில் உதிர்ந்தது...!!
விழி மூடி 
எவ்வளவு முயற்சித்தும் 
உறக்கம் வர மறுக்கிறது... 
பிறகுதான் புரிந்தது .. 
நீ 
என் மனக்கண்ணின் இமைகளை 
களவாடி சென்றிருப்பது...!!
குட்டிச்சுவற்றின்மீது 
முன்கால்களை ஊன்றி 
எட்டியவரை நாக்கை நீட்டி 
பறித்துவிட முயற்சிக்கிறது.. 
இளம் தளிரை...!! 
காற்று அதை காப்பாற்றும் முனைப்போடு
நாக்கின் தொடுகையிலிருந்து
நகர்த்த முனைகிறது...
ஆடு இன்னொரு இலைதேடி நகருமா..
இல்லை, காற்று அசரும் நேரத்தில் கவ்வி விடுமா...
தொடர்கிறது வாழ்விற்கான போராட்டம்...!!
ஒற்றை கொடியில் காயும் 
கோவண துணியும் 
கழுத்து டையும்... 
"என் இடுப்புத்துணியை 
உன் கழுத்துவரை உயர்த்த 
நான் கொடுத்த விலை..
என் ஆயுள் கால் உழைப்பு... "
ஒரு தந்தையின் மனசு..!!!
தந்தை இருக்கும் போது 
வீட்டிற்கு வர பிடிக்காத 
பதின் பருவ பையன்... 
சூரியன் இருக்கும்போது 
இந்த பூமிப்பக்கம் 
எட்டிக்கூட பார்க்காத இரவு...!!!
****************
பகல்...
இரவும் சூரியனும்
பூமிக்கு பின்னால்
ஒளிந்துகொண்டு ஆடும்
கண்ணாமூச்சி..
அதெப்படி.. 
உதடுகளுக்கு வயதாக ஆக 
முத்தங்களுக்கு மட்டும் 
இளமை கூடிக்கொண்டே போகிறது...??
வெறுமையாயிருந்த 
என் வாழ்வில் 
இப்போது எல்லாமிருக்கிறது... 
எதையும் நீ கொண்டுவரவில்லை.... 
எல்லாம் 
என்னுடன் தான் இருந்திருக்கிறது... ...
ஆம்.....
என் பார்வையாய்
நீ வந்திருக்கிறாய்..
இப்போதுதான்
எல்லாம் தெரிகிறது..!!

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

சில சமயம் 
வார்த்தைகளிடமும் 
வன்முறையை 
கையாள வேண்டி இருக்கிறது... 
உன்னைக்கண்ட உடன் 
ஒளிந்துகொள்ளும் வார்த்தைகளை 
எப்படி வெளிக்கொணர..???
கண்டங்கள் கடந்து 
அலைகற்றை ஊடுருவி 
அலைபேசி வழி 
சிதறாமல் 
என் செவிகளைச்சேர்கிறது 
உதடு குவித்து
நீ அனுப்பிய
முத்தத்தின் சத்தம்...
என் இதழ்கள்
ஈரமாயிருக்கிறது..!!!

திங்கள், 16 ஏப்ரல், 2012

கண்ணாடிகள் 
உடைந்து சிதறும் போதுதான் 
நமக்கு புலனாகிறது.. 
தெரிந்தது நிழலா .. 
நிஜமா என்று...!!!
நிறைய கவிதைகள் 
கருக்கலைப்பு செய்யப்படுகின்றன... 
பிறக்கும் கவிதைகள் எல்லாம் 
பேர் வாங்குவதும் இல்லை... 
ஒருவேளை 
கலைந்த கவிதையில்
ஏதேனும் ஒன்று
நோபல் பரிசுக்கு கூட
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்..!!!

வியாழன், 12 ஏப்ரல், 2012

உன்னை 
உட்கார வைத்து
வேகமாய் ஆட்டி விட்டபின்..  
விழுந்து விடுவாயோ என 
பதறி அடித்து 
பிடித்துக்கொண்டு 
பின்னாலேயே 
ஓடி வருகிறது 
பாழும் மனசு..!!!

புதன், 11 ஏப்ரல், 2012

என்னிடம் கொட்டிக்கிடக்கும் 
அன்பை கடை விரிக்கிறேன்... 
விலையாய்... 
உன் முத்தங்கள் போதும்.. 
அதனையும் 
வாழ்நாள் முழுக்க
தினசரித்தவனையில்
பெற்றுக்கொள்ளவும் சம்மதம்..!!!

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

வாரத்தில் 
இரண்டு நாட்கள் விரதத்துடன் 
வெள்ளிக்கிழமைகளில் 
சுவற்றில் வரைந்த 
மஞ்சள் வட்டத்தின் முன் 
காமாட்சி விளக்கேற்றி
கடவுளை தேடிக்கொண்டிருக்கிறார் அம்மா...
எல்லா கவலைகளுக்கு மத்தியிலும்
இரவுச்சாப்பாட்டுக்கு பின்
கயிற்றுக்கட்டிலில்
முடங்கும் முன்
நினைவு கூர்கிறார் தந்தை...
இருந்தால் ஏன் வரவில்லை..
என்றும்..
யாராவது அடிபட நேரும்போது
அவர் முன்னாளில்
செய்திருந்த பாவங்களும்
தெரிந்தமையால்..
கண்டிப்பாய் இருப்பார் என்றும்
இரு வேறு மன நிலையில் நான்..
எல்லோருக்கும் விடிகிறது...
யாருக்கும் தெரியாமல்
தூங்கும் போது
பார்த்துச்சென்று விடுகிறார்
கடவுள்......!!!
உன் கூந்தலில் 
மல்லிகைப்பூ 
வதங்க வதங்க... 
என்னுள் 
என்னென்னவோ 
மலர்கிறது...!!

அம்பரா துணியில் 
உறங்கிக்கிடக்கின்றன அம்புகள்
ஆணைக்குரிய காலத்தை எதிர்நோக்கி... 
எப்போது எழுப்பப்படுவோம்.. 
மார்பில் பாய வேண்டுமா.., 
மரத்தில் பாய வேண்டுமா... 
இல்லை இலக்கில்லாமல்
காற்றில் பாய வேண்டுமா..
எதைப்பற்றியும் தெரியாது..!
தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை...
ஏனென்றால்..
முதுகில் சுமந்து திரியும்
வேடனுக்கோ -
வீரனுக்கோ கூட தெரியாது...
இலக்கும் நேரமும் 
இறைகளாலும்
எதிரிகளாலும் 
தீர்மானிக்கப்படுகிறது..!!!



"ஆணைக்குரிய காலத்தை எதிர்நோக்கி... "- இந்த அணிகலனை சேர்த்து இந்த கவிதையை அழகூட்டியவர் எனது முக நூல் நண்பர் திரு அன்பு சிவன் அவர்கள்... அவருக்கு நன்றி...

வியாழன், 5 ஏப்ரல், 2012


போயிட்டு வரேன்.. 
நேரத்துக்கு சாப்பிடுங்க,
ரொம்ப நேரம் முழிச்சிட்டிருக்காம 
நேரத்தோட படுங்க.. 
இன்னும் என்னென்னவோ சொல்கிறாய்... 
என்னைத்தான் முந்தானையில் மூடி 
உடனேடுத்துச் செல்கிறாயே...
யாருக்கு சொல்கிறாய்..??
தயவு செய்து என் வீட்டிற்கு வந்தால் 
கண்ணாடி பக்கம் மட்டும் செல்லாதே... 
நீ விலகிய சிறிது நேரத்திலேயே 
உன் பிரிவைத்தாங்காமல் 
தவறி விழுவது போல் 
தற்கொலை செய்து கொள்கிறது...
கடவுளின் சொல் கேட்டு 
ஆதாம் மட்டும் 
ஆப்பிளை சாப்பிடாமலேயே 
போயிருந்தால் 
ஏவாள்தான் சொர்க்கம் என்று 
இறுதிவரை அவனுக்கு 
தெரிந்திருக்காது...
விற்பனையாளர் 
மீண்டும் மீண்டும் மடித்து வைக்க 
வழுக்கி வழுக்கி விழுகிறது 
ஒரு புடவை.. 
நீ என்னைப்பார்க்கிறாய்.. 
நான் உன்னை பார்கிறேன்...
உனக்காக நான் அடம்பிடித்தமாதிரிதான்
அந்த புடவையும்...
நிச்சயம் நீ அதைத்தான் எடுப்பாய்...!!!
மழை விட்டதும் 
சற்று நேரம் 
வெளியில் வந்து விட்டு போ... 
உன் வீட்டுக்குள் 
எட்டிப்பார்க்க வளைந்த வானவில்
அந்த நேரமாவது 
நிமிர்ந்து நிற்கட்டும்...!!!
தோளில் தூக்கிய தந்தையிடம் 
நானே நடப்பதாய் சொல்லி 
இறங்கினேன்,,, 
அவர் என்கையை பிடித்த போது 
அவரின் விரல்களை 
நானே பிடித்துக்கொள்வதாய் சொன்னேன்...
அவர் பிடியில் இருந்திருந்தால்
அத்தனை சீக்கிரம்
நழுவ விட்டிருக்க மாட்டார்..!!!
உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்.. 
சைவம் பிடிக்குமா? அசைவம் பிடிக்குமா..? 
சினிமா நிறைய பாப்பீங்களா.. 
கேள்விகள் கேள்விகள்.. 
எனக்குத்தான் புரியவில்லை.. 
இத்தனை கேள்வியும்
துணைக்கேள்விகள் தான்..
முக்கிய கேள்வியே
"என்னை பிடித்திருக்கிறதா "
என்பதுதானென்று..!!
நீ அருகிலிருக்கும் வரை 
நானும் நம்பியதில்லை 
எனக்கு கவிதை எழுத வருமென்று.. 
நீ விலகிய நாழிகை முதல் 
சிலிர்த்தெழும் வார்த்தைகள்
கவிதையாய் உதிர்கையில் தெரிகிறது.
நீ அருகிலிருக்கும் தைரியத்தில்
அவைகள் என்னுள்
உறங்கிக் கிடந்திருப்பது..!!!
சொல்லி இருக்கலாம்... 
நீ பேருந்தை தவறவிட்டு 
மெல்ல நடந்த நேரத்தில் 
எதிர்பாராமல் வந்ததாய் 
காட்டிக்கொண்டு 
உன்னை அமர வைத்து
சைக்கிள் மிதித்த
மூன்று கிலோமீட்டர் தூரம்
எனக்காய் மட்டுமே இருந்தது ..
அப்போது சொல்லி இருக்கலாம்...!!

உற்சவ மூர்த்தி
ஊருக்குள் வரும்
தேர் திருவிழா அன்று
மாலை வாங்கிவரச்சொல்லி
வழி மரித்தாயே..
அப்போது சொல்லி இருக்கலாம்...!!

உனது தந்தையின் பெயர் சொல்லி
விலாசம் விசாரித்தார்களே..
உன்னை பெண் பார்க்க வந்தவர்கள்...
அன்று சொல்லி இருக்கலாம்..!!!

சாலையோர குடிநீர்க்குழாயில்
என் வருகை அறிந்து
நிறைந்த குடத்தை
கவிழ்த்து விட்டு
இன்னொரு பத்து நிமிடம்
நீட்டித்து நின்றாயே..
அப்போதும் சொல்லி இருக்கலாம்..!!

உன் வருகை தெரியாமல்
சிகரெட்டை வாயில் வைத்து
வளையம் விட
நண்பர்களோடு முயற்சித்த வேளையில்
யாருமறியாமல் முறைத்துச்சென்றாயே..
அப்போது சொல்லி இருக்கலாம்....!!!

ஏதோ கேட்பதற்காய்
என் அம்மா
உன் வீடு வந்த போது
கை பிடித்து "சாப்பிட்டுத்தான் போகணும் அத்தை"
என உரிமையோடு நிறுத்தி
இலை அறுக்க ஓடினாயாமே..
அன்றாவது சொல்லி இருக்கலாம்..!!

இப்போது என் கவிதைகளை
எங்காவது நீ படிக்க நேர்ந்து விடுமோ
என அஞ்சுகையில் தோன்றுகிறது...
என் வலியை என்னுள் புதைத்து
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்...!!
உன்னைப்பார்த்து 
உருகத்தொடங்கிய பின் தான் புரிந்தது... 
இயக்கமில்லாமல் 
இவ்வளவு காலமும் 
என்னுள்ளேயே நான் 
உறைந்து கிடந்திருப்பது...

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

எத்தனை முறை 
காயப்பட்டாலும் 
காதலில் மட்டும் 
முன் அனுபவங்களையோ - 
தழும்புகளையோ 
மனம் கணக்கிலெடுத்துக்கொள்ள 
தயாராயிருப்பதே இல்லை...!!

நினைவுகள் 
காய்ந்து சருகாகி 
நெருப்புக்கு 
காத்திருக்கும் வேளைகளில் 
தேவதை தெளித்த 
சில நீர்த்துளிகள்..
துளிர்க்க தயாரான பொழுது
லேசாய் உரைத்தது...
அது தேவதை தெளித்த தண்ணீர்..
தேவதைகள்
எப்போதும் உடனிருப்பதில்லை...
உடனிருந்தால் 
அவைகள் தேவதைகளுமல்ல...

தண்டவாளத்தில் 
சரக்கேற்றுவதற்காக நிற்கும் 
பெட்டிகளை 
பற்றிக்கொள்ள முயலும் 
பாகற்கொடி... 
எந்த நேரத்திலும்
நகர்ந்து விடுமென
தெரியாமலேயே...
வெற்றுக்காகித பக்கங்களுடன் 
கிடைத்த வாழ்க்கை புத்தகம்..!!! 
சில பக்கங்கள் என்னாலும் 
பல பக்கங்கள் யாரோவாலும்...
நான் விரும்பியதை எழுத 
என்னாலும் இயலவில்லை..
என் விருப்பம் அறிய
இதுவரை எழுதிய யாரும்
தயாராகவுமில்லை..
இன்னும் எவ்வளவு பக்கங்கள் .?
எழுதப்போவது நானா..
வேறு யாருமா..
தெரியாது..
பக்கங்கள் புரண்டுகொண்டே இருக்கிறது.!!!.