நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 29 மார்ச், 2012

எதிர்பாராமல் 
திரண்ட மேகங்கள்.. 
கொட்டித்தீர்த்தன 
கோடை மழை... 
கப்பல் செய்யும் 
காகிதம் தேடும் அபிக்கு.. 
எதைக்கொடுப்பது... 
என்னிடமிருக்கும் 
எல்லா புத்தகங்களும் 
யாரோ ஒருவரின் அனுபவமோ.. 
ஆசைகளோ.. 
கனவுகளோ.. 
ஏக்கங்களோ... 
யாருடைய கனவை 
நான் கலைக்க..?? 
இறுதியாய் கிடைத்தது 
அந்த பழைய டைரி... 
அது.... 
நான் என் மனைவிக்காக 
எழுதிய காதல் கவிதைகள்... 
போன முறை மழைக்கு 
அபி சில கப்பல்கள் செய்தாள்.. 
அம்மு கொடுத்த 
அந்த காகிதங்கள் 
நான் "அவளு"க்கெழுதிய
காதல் கடிதங்களாய் கூட 
இருக்கும் வாய்ப்பிருக்கிறது...!!

புதன், 28 மார்ச், 2012

உருண்டு வழியும் 
ஒற்றை கண்ணீர் துளி 
என் கன்னங்களில் 
எழுதிச்செல்கிறது 
உன் பிரிவின் வலியை 
மௌன மொழியில் 
வார்த்தைகளற்று..!!
நிசப்தமான 
இரவு குளத்தில் 
கல்லெறிகிறது நாய்... 
வெளிச்ச குமிழ்கள் 
கிளம்புகிறது வீடுகளில்... 
தங்கத்தை
குறி வைத்த திருடர்களும்
"தங்கத்தை" குறி வைக்கும்
காமுகர்களும்
பதுங்குகிறார்கள்...
நட்சத்திரக் கண்களால்
மௌனமாய்
வேடிக்கை பார்க்கிறது வானம்...
இளம் விதவையின்
தனிமை இரவுகள்...

திங்கள், 26 மார்ச், 2012

எல்லோரும் 
தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்... 
இரவு மட்டும் தூங்காமல் 
காவலிருக்கிறது... 
அகலிகைகள் 
ராமனின் பாதையிலிருந்து 
விலகி உருள்கிறார்கள்... 
பாதம் பட்டு அடையும் 
மோட்சத்தை விட 
கல்லாயிருப்பதே சுகம்...!!! 
நீ ஓடினாய்.. 
நான் துரத்தி பிடித்தேன்... 
நான் ஓடுவதாய் 
பாவனை செய்தேன்.. 
நீ எளிதில் பிடித்துவிட்டாய்... 
இருவரும்
ஒரே திசையில் ஓடினோம்... !!!
இன்றும்
இருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்..
யாரும் யாரையும்
பிடிக்கமுடியாத படி
திருமணம் என்ற பெயரில்
வெவ்வேறு திசைகளில்...!!
 

எரிவதனால் 
இன்னும் சிலருக்கு 
வெளிச்சம் கிடைக்குமென்றால் 
என் தலை கணம் கூட 
எனக்கு பெருமை தான்... 
-ஒரு தீக்குச்சி...

ஞாயிறு, 25 மார்ச், 2012

ரோஜாக்களை 
பிரதானப்படுத்தி 
முட்களை 
பார்வையில் மறைக்கும் காதல்... 
முட்செடியில் 
எப்போதாவது
சில ரோஜாக்களை
மலர்விக்கும் திருமணம்...!!


அன்பில் மூழ்கடிக்கும்
மிக தீவிர யுத்தத்தில்
உன்னை
ஜெயித்துவிடும் முனைப்போடு
நமக்கான
பரமபத விளையாட்டில்
வார்த்தை வார்த்தையாய்
தேடி எடுத்து
கவிதைகளாய் புனைந்து
கட்டம் கட்டமாய் முன்னேறும்
என் காதலை
உன் முத்தப்பாம்புகள்
ஒரு நொடியில் விழுங்கி
வால் வழியே
தொடங்கிய இடத்திற்கே
துரத்தி அடிக்கிறது...
மீண்டும்....
அதே மாறாத முனைப்புடன்
என் வார்த்தைக்கான தேடல்...!!!

சனி, 24 மார்ச், 2012


முதுகில் காயம் பட்டால்
அக்கோழைக்கு
பால் கொடுத்த
மார்பை அறுத்தெறிவாளாம்
வீரத்தமிழச்சி...
இவளிடம் பால் குடித்தால்
இன்னொரு
புறநானூற்று வீரம்
புதிதாய் முளைத்து வருமென்றா
இவளின்
முலைகளை கொய்தீர்கள்
கோழைகளே..??
என் உதடுகள்
வியர்க்க 
கற்றுக்கொண்டிருக்கின்றன... 
உன் உதடுகளின் 
சிநேகம் கிடைத்த பிறகு...!! 

நான்
பிறக்கும் போது
உனக்கு வலித்திருக்குமே
அம்மா....
அப்போது நீ "அம்மா........ "
என்று தானே அலறி இருப்பாய்....
இப்போது எனக்கு வலிக்கிறது...
குப்பைத்தொட்டியில் வீசும்போது
அலறுவதற்கு
வேறு ஏதேனும் வார்த்தையையும்
விட்டுச்சென்றிருக்கலாமே நீ...???

வியாழன், 22 மார்ச், 2012

தேவதைகளும்
விதவைகளும்
வெள்ளையுடைக்குள்
விரும்பி நுழையவில்லை...
ஆயினும் ...
சமூகம் கொடுத்த பரிசென்னவோ..
தேவதைக்கு சிறகும்..
விதவையின் கால்களில் விலங்கும்...
என்னுள் நீ ஐக்கியம்.. 
என்பவனோடு 
புதைந்து போகவோ... ... 
அதிகமாய் போனால் 
அவனில் 
பாதியை
பங்கு போட்டுக் கொள்ளவோதான்
இங்கே சக்திகளுக்கு
தெரிந்திருக்கிறது...
முழுதாய் தந்துவிட
சிவனே தயாராயிருந்தும்..
எடுத்துக்கொள்ள
எந்த சக்திக்கும் தெரியவில்லை...!!!
 

என்னிடம் விலை கூடிய
நவரத்தினங்கள் இல்லை...
ஆனால்
அதைவிட அழகான வர்ணங்களை
உன் தோகையில் கொண்டுவரும்
அன்பு இருக்கிறது என்னிடம்..
வெள்ளையாய் இருப்பதில்தான்
உனக்கு விருப்பமா மயிலே...???
( என் சக்திக்காக...)
காவிரி தண்ணீரும் 
கரண்டும் 
எங்களை விட்டு விலக விலக... 
எங்களூர் பிள்ளைகள் 
இஞ்சினியர்களாய்... 
அவதாரம் எடுக்க எடுக்க...
எங்கள் வீடுகளில்
நெல்மணிகள்
எங்களுக்கே
அதிசயமாகிப்போனது....
வெள்ளைக்காலர் சட்டை சம்பளம்
எங்கள் கைகளில்
அலை பேசியாகவும்..
எங்கள் கால்களுக்கிடையில்
பெட்ரோல் வாகனங்காகவும் சேரச்சேர
நெல்மணிகளுக்காக
குறுக்கிலும் நெடுக்கிலும் பறந்து..
எங்கள் கொட்டகையில்
கூடுகட்டி இருந்த
சிட்டுக்குருவிகளும்
அருங்காட்சியகத்திற்கு போயிருக்கிறது....
இதற்கெதிராய் தீர்மானம் கொண்டுவர
எந்த கழுகிற்கும் தெரியவில்லை...
அப்படியே கொண்டு வந்தாலும்
யாரும் அதை
ஆதரிக்கப்போவதும் இல்லை...
செத்துப்போனது சிட்டுக்குருவிதானே...??
 

ஞாயிறு, 18 மார்ச், 2012

இப்போதெல்லாம் 
என்னை நான் 
அதிகமாய் காதிலிக்கிறேன்.... 
உனக்கு பிடித்தவை 
எல்லாம் 
எனக்கும் பிடிக்க தொடங்கிய பின்...
உனக்கு
அதிகமாய் பிடித்த
என்னை காதலிக்காமல்
என்னால் எப்படி இருக்க முடியும்...??!!
 
கோடிட்ட இடங்களாய் இருக்கும் 
என் கன்னங்களையும் ...
உதடுகளையும் நீ 
முத்தத்தால் நிரப்பு... 
வரலாற்றில் 
எனக்காக காத்திருக்கும்
வெற்றுப்பக்கங்களை
நான் நிரப்பி விடுவேன்..!!!
 
சோகத்தில் 
வழிந்த கண்ணீர் 
காய்வதால் ஏற்பட்ட 
கன்னச்சுருக்கத்திற்கும்... 
சந்தோஷ மிகுதியில்
சிரிப்பால் ஏற்படும்
கன்னச்சுருக்கத்திற்கும் .. ...
நீ மட்டுமே முழுப்பொறுப்பு...
ஆகவே
உன் உதடுகளால்
இஸ்திரி போட வேண்டியதும்
உன் பொறுப்புதான்...!!!
 
வானம் எங்கே இருக்கு அப்பா... 
என வினவும் குழந்தைக்கு 
ஜன்னலை திறந்து காட்டும் 
தந்தை மாதிரித்தான் 
நானும் முயற்சிக்கிறேன்..
கவிதைகளின் மூலம் 
என் காதலைச்சொல்லிவிட.... 

வெள்ளி, 16 மார்ச், 2012

வட்டி...
வட்டிக்கு வட்டி...
கந்து வட்டி...
மீட்டர் வட்டி...
ராக்கெட் வட்டி...
எந்த வட்டியானாலும்
எனக்கு சம்மதம்..
கொஞ்சம் முத்தங்களை
கடனாய்க் கொடு...!!!
 

எந்த வீட்டு விசேஷத்திலும்
பந்தியில் வைக்கும்
மைசூர் பாகோ...
ஜாங்கிரியோ..
உன் முந்தானைக்கும்
இடம் பெயரும்...
எம்புள்ள போன உடனே
கைய பாக்குமென
யாருக்கும் தெரியாமல்
உதடுகள் முனுமுனுக்கும்...
அவையத்து முந்தி இருந்தாயோ
இல்லையோ.. ..
உன் பிள்ளை
சான்றோன் என கேட்க
நான் என்ன செய்ய போகிறேன்..???

வியாழன், 15 மார்ச், 2012

வளர்ந்த பயணிகள் 
முன்னாலிருக்கும் பயணியின் 
சட்டையையும் 
வளர்த்தி குறைந்த பயணிகள் 
அடிக்கடி அவிழ்ந்து விழும் 
கால்சட்டைகளையோ...
அதையும் தாங்கி பிடித்துநிற்கும்
அரைஞான் கயிற்றையோ
பிடித்துக்கொள்ள..
மரங்களுக்கிடையில்..
சந்துகளில்..
எப்போதாவது அபூர்வமாய்
பிரதான சாலையிலும்
ஓட்டுனரின் விருப்பம் எப்படியோ
அப்படியே
வளைந்து வளைந்து
வரும் எங்கள் பேருந்து..
எதிரில் எதுவுமே வராவிடினும்
"கீ.. கீ.." என்றோ..
"பாங்க்..." என்றோ..
வினோதமான ஒலி எழுப்பியபடி
"ம்ப்ரர்ர்ர்ர்......... "
உதடுகளில் எச்சில் தெறிக்க
சமயத்தில் வேகமாகவும்
சமயத்தில் மெதுவாகவும் ஓட்டுவார்.. ...
சற்றே வளர்ந்ததால்
ஓட்டுனர் உரிமம் பெற்ற
பெரிய அண்ணன்...
புகையில்லை...
கட்டண உயர்வுபற்றி
கவலையும் இல்லை...
அந்த பேருந்து
அப்படியே ஓடிக்கொண்டிருந்திருக்கலாமோ...!!!
 

புதன், 14 மார்ச், 2012

ஏதோ ஒரு காரணத்திற்காய் 
எப்போதோ எதிரியாகிப்போன 
பக்கத்து வீட்டுக்காரனின் 
புது மனைவியும் 
எந்த காரணமும் இல்லாமலேயே
பார்வையிலேயே 
விரோதம் வளர்கிறாள்..
ஒரு வேளை அவள் 
வேறோர் வீட்டில்
வாழ்க்கைப்பட்டிருந்தால்
சிநேகமாய் புன்னகைத்திருக்க கூடும்...!!!
என் சோகங்களை 
புதைத்து வைக்க 
முற்படுகிறேன்... 
ஆனால் அது விதையாய் மாறி 
ஏற்கெனவே புதைத்து இருக்கும் 
உன் ஈர  நினைவுகளில்  
ஊறி ஊறி மீண்டும்    
முளைத்து வந்து விடுகிறது..!!!

செவ்வாய், 13 மார்ச், 2012

நீ பெண்ணென்றும் 
நான் ஆணென்றும் 
அறியாத வயதில் 
கண்ணா மூச்சி 
ஆடினோம்... 
என்னால்
கண்டு பிடிக்க
இயலவில்லை என்று
நீயே வெளியில் வந்து
நீ இருக்குமிடம்
தெரிய வைத்தாய்...
அந்த ஆட்டம்
அப்போதே முடிந்தது...
எல்லாம் உணர்ந்த
இந்த வயதில்
உன்னை நீயே
ஒளித்துவைத்துக்
கொண்டிருக்கிறாய் ...
கண்டு பிடித்த பின்னும்
காட்டிக்கொள்ளாமல்
நானிருக்கிறேன்...
வெளியில்
வரக்கூடாதென நீ
அடம் பிடிக்கிறாய்...
இந்த கண்ணாமூச்சி
எப்போது முடியும்..???
 
பார்த்தல், 
கேட்டல், 
உணர்தல்,
நுகர்தல், 
சுவைத்தல்.. 
இவற்றோடு
சில ஆண் பெண்களை விடவும்
கூடுதலாய் சிந்திக்கும்
பகுத்தறிவும்
பெற்றிருந்த போதும்
"அது" என்றே அறியப்படுகிறார்கள்...
திரு நங்கைகள்..!!!
 
வற்றிய 
குளத்துப்பக்கம் 
செல்ல நேர்ந்தால் 
உன் கண்களை 
மறைத்து செல்... 
மீன்கொத்தி பறவைகள் 
பசியோடு காத்திருக்கின்றன... 

திங்கள், 12 மார்ச், 2012

ஒவ்வொரு முறை  
என்னால் 
தற்கொலைக்கடிதம் 
எழுதப்படும்போதும்  
நாக்கில் நீர் ஒழுக... 
மரணம் தன் கோரப்பற்களில் 
கிழித்துவிடும் 
நோக்கோடுதான் 
என்னை சுற்றுகிறது... 
உன் நினைவுகள் 
அந்த கடிதங்களைக் 
கிழித்தெறிகிறது  ... !!!
இழப்பதற்கு 
எதுவுமின்றி 
கடன் பட்டார் 
நெஞ்சம் போல் 
கலங்கி நிற்கிறேன் ... 
ஆனால்
எல்லாவற்றையும்
அனுபவித்து முடித்த
ராவணன் அல்ல நான்......
"இன்று போய்
நாளை வா" என்று
சிரிக்கிறது மரணம்...
ஒரு வேளை அது
ராமனாய் இருக்கலாம்...!!!
என்ன பாவம் செய்தோம் நாங்கள்...

எல்லா பொருளுக்கும் 
"இன்ஸ்டன்ட் கேஷ்"
வாழ்க்கை மட்டும் 
"இயர்லி இன்ஸ்டால்மென்டில்"..

காயடிக்கப்பட்ட
காளைமாடு
எங்களை விட
இன்னும் ஒரு படி மேல்...

எங்களுக்கான பாலை
ஏன் எந்த கள்ளிச்செடியும்
சுரக்காமல் போனது...??

எங்களுக்கான
ஒற்றை நெல் மணி
ஏன் எந்த பயிரிலும்
விளையாமல் போனது..??

"அடுத்தொரு பொறப்பிருந்தா
பொண்ணாக பொறந்து வாடா...
போதாத காலமிது..
போய்வாடா சின்னத்தம்பி.."
என்று பாட
ஏன் எந்த கருத்தம்மா கிழவியும்
எங்களுக்கு மட்டும்
இல்லாமல் போனாள்..??

ஐந்து நிமிடம்
அதிகமாகவோ
குறைவாகவோ காட்டியதற்காக
எந்த கடிகாரமும்
தண்டிக்கப்படுவதில்லை..
ஆனால்...
எங்கள் துயிலெழுகை
ஐந்து நிமிடம் தாமதமானால்
காலைக்கடன்களில்
ஏதாவதொன்றிற்கு
வட்டிமட்டுமே கட்ட இயலும்..

ஏ... நான் பிறந்த
மானம்கெட்ட
மனித சமுதாயமே...
கரன்சிகளின்
மை வாசனைக்கும்..
கழுத்தில் தொங்கும்
உலோகத்தங்கத்திற்கும்
வலிதெரிவதில்லை....
இரத்தம் சொட்டும்
எங்கள் வலி
ஏன் உனக்கு புரியவில்லை..???
நீயும் நானும் 
எவ்வளவு 
நெருங்கி இருந்தும் 
எனக்குத்தெரியாமல் 
எப்படியோ 
உள்ளே
நுழைந்து விடுகிறது...
உன் வெட்கம்..!!!

ஞாயிறு, 11 மார்ச், 2012

முழங்காலை 
எட்டத்துடிக்கும் 
புழுதிப்படிவோடு ,அம்மா 
"எங்கடா போய் ஆடிட்டு வர " என்று 
செல்லமாய் அடிக்க 
கை ஓங்குகையில் 
ஓடிவந்து முழங்காலை 
கட்டிப்பிடித்து 
முகம் புதைத்த 
புடவை வாசம்... 

அரை குறை 
தூக்கத்தினூடே 
"உம" கொட்டியபடி 
கதையோடு சுவாசித்த 
அப்பாவின் 
வெற்றிலைச்சாறு நெடி கலந்த 
வியர்வை வாசம்... 

பின்னாளில் 
கொஞ்ச வசதி வந்ததும் 
தாலிக்கொடியை 
தங்கச்செயினாய் 
மனைவி மாற்றியதில் இழந்த 
மஞ்சள் மனம் கலந்த 
பின்கழுத்து வாசம்.. 

ஜான்சன் பவுடரும் 
மேரி பிஸ்கெட்டுமாய்  
அபிகுட்டி 
முகத்தில் உமிழ்ந்த 
எச்சில் வாசம்... 

குளிர்பதன அறையில் 
பணியமர்ந்த பின் 
பாடி ஸ்ப்ரே களவாடிய 
எனக்கே உரித்தான 
சொந்த வாசம்...  

உயர உயர தொலைந்தது 
வாசனைகள்   மட்டுமா... 
வாழ்க்கையும்தான்...!!!