நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 26 செப்டம்பர், 2012

உனக்காகவும் 
உன்னைப்பற்றியும் 
எழுதியதை எல்லாம் 
ரசித்து படிக்கையில் கவனிக்கிறேன்.. 
உன் இதழின் 
கடைகோடியில் 
லேசாய் புன்னகைக்கிறாய்....
ஆயுள்வரை எழுத 
ஏதோ இருக்கிறது... 
உன்னைப்பற்றியும்.. 
உனக்காகவும்..!!!
விஸ்வாமித்திரன் 
தவமிருக்கிறான்... 
மேனகை வேண்டி...!!!
காதல் சுகமானது..!!!

விலக விலக என்னுள் நீ 
விஸ்வரூபமெடுக்கிறாய்.. 
நெருங்க நெருங்க 
உன்னுள் நான் 
தொலைந்து போகிறேன்..!!!

நீயா நானா என்ற போராட்டம் 
நிறையபேரை பிரிக்கிறது.. 
ஆனால் நம்மை மட்டும் 
நெருக்கி பிணைக்கிறது... 
ஆம்... 
யார் அதிகமாய் காதலிப்பது.. 
நீயா நானா என்ற போராட்டம்..!!!


நீ என்னை 
அணைத்துக்கொண்டது என்னவோ 
நிமிடங்களில் தான்... 
ஆனால் அந்த நினைவுகள் 
என் ஆயுளை வருடங்களாய் நீட்டிக்கிறது...!!!
ஓயாமல் 
பேசிக்கொண்டிருந்தோம்... 
காதல் 
சற்று தூரமாய் 
விளையாடிக்கொண்டிருந்தது... 
மௌனமாய் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தோம்... 
காதல் இருவருக்கும் நடுவில் 
ஓடி வந்து படுத்துக்கொள்கிறது..

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ரேஷன் கடையிலிருந்து 
ஓட்டை பையில் சர்க்கரை வாங்கி.... 
கொட்டியது தெரியாமல் 
வீட்டிற்கு வெறும் பையை 
கொண்டுவரும் சிறுவன் மாதிரி 
நீ தொடர்பற்று போன நாளில் தான் 
வெறுமையை உணர்ந்தேன்.. 
கொஞ்சம் கொஞ்சமாய் 
என்னை உன்னிடம் 
இழந்த விஷயத்தை.... !!!

புதன், 12 செப்டம்பர், 2012


கோபம் என்ற சேற்றை 
என் மீது பூசிக்கொண்டு 
எனக்கு நானே 
கல்லறை வைத்துக்கொண்டதாய் 
நம்பும் வேளையிலெல்லாம் 
சூரியனாய் வந்து விடுகிறாய் .. நீ 

காதலில் காய்ந்து வெடிக்கும் 
கோபச்சேற்றுபூச்சு உதிர்ந்து 
மீண்டும் உயிர்த்தெழுகிறேன்...!!!

துண்டு துண்டாய் ஒரு வானம்..

மல்லிகை வாசம் 
கிளர்ச்சி ஏற்படுத்தும் 
படித்து தெரிந்தது.... 
ரோஜாவாசம் 
கிளர்ச்சி ஏற்படுத்துகிறது.... 
பட்டு தெரிந்தது... 
காரணம் ...நீ..!!!

துண்டு துண்டாய் ஒரு வானம்..
"செல்லம்...
செல்லம்..."
சீரான இடைவெளியில் 
நான் அழைக்கும் போதே 
தெரியுமுனக்கு..
நான் என்ன சொல்ல போகிறேனென்று...
"I LOVE YOU DA .."
"ம்..."

I LOVE YOU TOO
பதினோர் எழுத்து பதிலை
ஒற்றை எழுத்தாய்
சுருக்குகிராய்..
வார்த்தைகளை
எழுத்துக்குள்ளும் ..

என்னை உனக்குள்ளும்
அடக்குவதில் சுகம் உனக்கு..
அடங்குவதில் சுகம்
எங்களுக்கு..

துண்டு துண்டாய் ஒரு வானம்..

உப்புக்காற்றில் ஊடுருவி 
காதுநுழைந்து ..
உயிருக்குள் 
ஊர்வலம் நடத்துகிறாய் நீ... 
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.... 
உனக்கு முன்னால்  நானும்.. 
எனக்கு முன்னால் நீயுமர்ந்து 
பரஸ்பரம் ரசித்துக்கொண்டிருக்கிறோம்.. 
வார்த்தைகளற்று மௌனமாய்...!!
செந்தமிழ் நாடென்னும் போதினிலே..
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..
--- மகா கவி சுப்பிரமணிய பாரதி 
"செந்தில் நாடு வா.." என மகள் சொல்லும் போதினிலே..
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..
-- மகா பாவி செந்தில் கே நடேசன்.

விளக்கடியில் ஒட்டி இருக்கும் 
துரத்த முடியா இருள் மாதிரி 
எல்லா காதலிலும் 
கொஞ்சம் காமம் 
இருக்கத்தான் செய்கிறது..

புதன், 5 செப்டம்பர், 2012

தூக்கிலிட்ட போதும் 
சந்தோஷமாய் 
சிரித்துக்கொண்டிருக்கின்றன.. 
தூக்கிலிடப்பட்டது 
உன் கூந்தலில் என்பதால்.. 

# மல்லிகை பூக்கள்..
காகிதம் 
காற்றில் பறந்து ஓடுகிறது.. 
பேனாவில் 
மை தீர்ந்து பல்லிளிக்கிறது.. 
பென்சில் முனை 
உடைந்து சிதறுகிறது.. 
ஆனாலும் எழுதுவோம்.. 
எழுதுகோலாய் எம் விரல்கள்.. 
காகிதமாய் பூமிப்பரப்பு.. 
இடையில் நிறுத்த 
இரண்டே காரணங்கள்தான் வேண்டும்..
ஒன்று எம் விரல்கள் ஓய வேண்டும்..
இல்லை
பூமி சுற்றுவதை நிறுத்தவேண்டும்!!!.
முரசுக்கட்டிலில் 
கண்ணயர்ந்த 
ஏழை புலவனின் 
துயில் காக்க 
சாமரம் வீசிய அரசன்.. 
இது சங்க இலக்கியம்.. 

தன்மீது துயிலும் மகளை 
தட்டிக்கொடுத்து ரசிக்கும் நான்.. ... 
இது தந்தை இலக்கியம்..!!!
பட்டாம்பூச்சியை 
அலகிடை கவ்வி 
சாரளத்தின் வழி நுழைந்து 
கீற்றுக்குடிசையின் 
மோட்டிலிருந்து தொங்கும் 
கயிற்றில் கட்டிய சிறு கூடுநோக்கி 
விர்ர்ரென சிறகடிக்கும் 
சிட்டுக்குருவியாய் 
பறந்து வருகிறது மனசு.. 
உன்னை பார்த்த சந்தோஷத்தில்..

வேகமாய் கடந்து சென்ற
வாகனமேற்படுத்தும்
வெற்றிடம் நிரப்ப
காற்றோடு சேர்ந்து
ஓடிவரும்
குப்பைகளாய்
கூடவே காமமும்..!!!

சனி, 1 செப்டம்பர், 2012


தவற விட்ட அழைப்புகள் 
ஒவ்வொரு நேரத்திற்கும் 
ஒவ்வொரு கேள்வியை சுமந்து வருகின்றன.. 
விடிகாலையில் ..
"இன்னும் தூங்குறீங்களா.." 
உச்சி வெயிலில் " சாப்டீங்களா..? "
மாலை பொழுதில்.. 
"ரூம்க்கு போயாச்சா..." 
ஊரடங்கும் வேளையில் ... 
"தூக்கம் வரலடா.." 
தவறவிட்ட அழைப்புகள் 
தாங்கி வரும் 
ஒவ்வொரு கேள்விக்கும் 
அதே தவறவிட சொல்லிக்கொடுக்கப்பட்ட 
அழைப்புகளாலேயே 
பதிலும் சொல்ல பழகி இருக்கிறோம்.. 
மிஸ்டு கால்களால் 
மிஸ்ஸான வாழ்க்கையை 
வாழ்ந்து விடும் வெறி 
கண்களில் நிலழாட 
தூங்கிப்போகிறோம்.. 
விடியட்டும்,... 
இன்னொரு மிஸ்டு கால் வரும்..!!!