நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 25 ஜூலை, 2012

நட்டுவைத்த 
மூங்கில் கம்புகளில் 
இழுத்துக்கட்டிய வெண்திரை... 
இன்னும் சிறிது நேரத்தில் 
எம் ஜி ஆர் நம்பியாருடனோ- 
ரஜினிகாந்த் - ரகுவரனுடனோ
சண்டையிட
பெட்டிக்குள் காத்திருக்கிறார்கள்
பிலிம் சுருளாய்...
எங்கிருந்தோ பரவும்
வெளிச்ச கதிர்கள்
திரையை முத்தமிட்டு
அளவு சரி செய்யப்படும் வரையில்
வெடித்துக்கிளம்பும்
உற்சாக குரல்களும் ...
எம் தந்தையர் சார்ந்திருக்கும்
கட்சி சின்னங்களை
விரல்களில் நிழலோவியமாகவும்...
தீட்டி திரிந்த திருவிழாக்கள்...
அடடா...
கோயில் அங்கே இருக்கிறது...
திருவிழாக்களும்
அங்கேதான் நடக்கிறது....
அந்த உற்சாகம் மட்டுமெப்படி
டாஸ்மாக் புட்டிகளுக்கு
இடம்பெயர்ந்தது??
நான் வளர்கிறேனா..
தேய்கிறேனா..???












இடுப்பில்
நிறை குடத்துடன் 
மற்றொரு கையில் 
நீரை அள்ளி அள்ளி 
சாலையில் ஓவியம் வரைந்தபடி 
நடக்கும் பேரிளம் பெண்ணோ... 

நுங்கு குடுக்கையில் 
சிகரெட் அட்டையை மடித்து 
ஆணி அடித்து 
புல்லட் சத்தமெழுப்பிய படி 
ஒற்றைக்கையால் 
கால்சட்டையை பிடித்துக்கொண்டு 
குறுக்குவழி ஓடும் சிறுவனோ... 

குப்பைதொட்டிக்கு 
வெளியில் வீசிச்சென்றவர்களின் 
முன்னோர்களை எல்லாம் 
தோண்டி எடுத்து 
திட்டி திருப்தி அடையும் 
துப்புரவு தொழிலாளியின் கோபமோ..  

கண்டக்டரின் விசிலை தொடர்ந்து 
நின்ற பேருந்தின் 
முன்னிருக்கையில் உதயமான தேவதை 
விசிறிச்சென்ற துப்பட்டாவின் நுனி தழுவலோ... 
யாரோ.. அல்லது ஏதோ ஒன்று 
பற்றவைத்துக்கொண்டுதான் இருக்கிறது 
கவிதைக்கான தீப்பொறியை... !!!

சனி, 7 ஜூலை, 2012

கூடலுக்கு முன்னிடும் 
முரட்டு முத்தங்களை காட்டிலும் 
கூடலுக்கு பின்னிடும் 
மெல்லிய நெற்றி முத்தம் 
கூடலுக்கான முற்றுப்புள்ளியை 
தொடரும் புள்ளிகளாய் 
மாற்றுகின்றன...!!!

கொஞ்சம் உன் கூந்தலை உதறிவிடு..
அருவி பார்க்க ஆசையாய் இருக்கிறது..!!!