நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

என் நிழல்களுக்கும் 
தெரியாத ரகசியங்களை நான் உன்னுடன்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.. 
விளக்கை அணைத்துவிட்டு...!!!

பூப்பெய்த அன்று பெய்வித்தார்கள்
செயற்கை மழையை...
சல்லடையில் தண்ணீர்...!!!

நீ எப்போதாவது
மின்னலென
சிரித்துவிட்டு போய் விடுகிறாய்...
என்னுள் தொடர்ந்து
இடி முழக்கம்...!!!

ஒரு மாலை நேரம்..
பட்டாம் பூச்சிகளின் கூடாரத்தில்
இளைப்பாரச்சென்றிருந்தேன்...
அங்கே தேன் எதுவும் சேகரிப்பில் இல்லை..
மாறாக..
நாளையும் பூக்கள் மலரும் என்ற
நம்பிக்கை மட்டும்
அளவுக்கதிகமாய் சேகரிக்கப்பட்டிருந்தது...!!!

அடிமைகளாய் சந்தோஷிக்கிறோம்...
எனக்கு அவளும்..
அவளுக்கு நானும்...!!!
வருத்தப்படுகிறாள் அம்மு...
"நீங்க நிறைய எழுதிட்ரீங்கபா....
எனக்கு தான் சொல்ல கூட தெரியல..."
அடி மண்டு.. எனக்காக சாப்பிடாம இருக்கியே..
இத விட எப்படி சொல்ல முடியும்..?
பின்கூந்தலில் விரல்கள் அலைய
சமாதானம் சொல்கிறேன்..
இதழ்களில் முத்தமிட்டு மார்பில் முகம் புதைக்கிறாய்..
இப்போது எனக்கு வருத்தம்..
இப்படி எளிதாய் சொல்லிவிடும் நேர்த்தி
எனக்கு ஏன் வாய்க்கவில்லை..!!!

ரத்தத்தில் எழுதிக்கொடுத்த
காதல் கடிதத்தில்
நெகிழ்ந்து போனாள்...
கோழிக்குஞ்சுக்கு நன்றி...!!!!






என் செந்தில்....






எனக்கு நீ எழுதும் கடிதங்களின் 
முகவரி பகுதியில் என் செந்தில் 
என நீ எழுதி இருப்பதில் 
நம் காதலின் ஆழம் சொல்லும் 
வைக்கப்படாத புள்ளி....!!!
காதல் விதையிட்டு..
காதல் நீரூற்றி..
காதல் உரமிட்டு..
காதலோடு கவனிக்கிறேன்..
அது காதலாய் பூத்து..
காதலாகவே காய்க்கிறது...!!!!
எனக்கு 
காதல் மட்டும் போதுமென 
போ.. போ..வென விரட்டி பார்க்கிறேன்... 
ஒற்றைச்சிறகோடு 
பறக்க இயலாதென 
அது காமத்தையும் 
உடனழைத்தே வருகிறது...!!!
அவசரமாய் பேருந்தில் தொற்றுகிறாய்...
"முன்னாடியே வந்து நிக்கறதில்லையா."
ஒரு கை பாதுகாப்பாய் பிடிக்குமே......அது...

மழையில் நனைந்து வீடு திரும்புகிறாய்..
எங்காவது நின்னுட்டு மழை விட்ட பிறகு வந்திருக்கலாம்ல..
கையில் துண்டுடன் ஒரு கை தயாராய் இருக்குமே.. அது..

சாப்பிடும் போது புரைக்கேறினால்..
தலையில் தட்டி தண்ணீர் நீட்டுமே ஒரு கை.. அது..

தூக்கம் வராமல்
புரண்டு கொண்டிருக்கும் இரவுகளில்
தலை கோதி கால் பிடித்து தூங்கச்செய்யுமே ஒரு கை.. அது..

எல்லா கைகளுக்கும் ஒரு உருவம் கொடுத்துப்பார்...
அப்போது புரியும்.. அது கை அல்ல.. என் காதல் என்று...!!!








கன்னம் கடித்து பற்கள் பதிக்கிறாய்... 
அந்த முரட்டுத்தனம் பிடித்திருக்கிறது...
கால்களை மடியில் ஏந்தி நீவி விடுகிறாய்.. 
அந்த மென்மையும் பிடிக்கிறது..
இரண்டிலும் இருப்பது ஒன்றேதானே.. .. 
வெவ்வேறு பரிமாணத்தில்..
காதல்...!!!

தான் விளையாடி விட்டு 
ஓரமாய் போட்டதை 
வேறெந்த குழந்தையாவது 
எடுக்கும் போதுதான் 
அதில் இன்னும்கூட புதிதாய் ரசிக்க 
நிறைய விஷயமிருப்பது புரிகிறது.. 
குழந்தைக்கு...!!!!
உனக்கு எப்போதாவது 
என்னை பார்க்க தோன்றினால் 
கண்ணாடி முன் அமர்ந்து 
கண்களை அகல விரித்து பார்...
நீ சிறைவைத்த நாள் முதல் 
விடுதலை விரும்பாமல் 
அங்கேதான் இருக்கிறேன்...!!!
வெட்டினால் கூட வலியறியாத
என் உரோமங்களும் உயிர்பெற்று 
எழுந்து நின்று எட்டிப்பார்க்கிறது...
உன் மூச்சுக்காற்று 
என் காது மடல்களை வருடும்போது...!!!

மது அருந்தலாம் என்று அழைத்த
நண்பர்களிடம் மறுத்து விட்டேன்...
இரட்டை போதையை
என்னால் தாங்க முடியாது..
உன் இதழ் கள்...!!!
ஒரு மழைக்கால இரவின் 
தாங்க முடியாத குளிரிலோ..
கோடைகால இரவின் 
வெக்கை தாங்காமலோ..
நான் மரித்திருப்பேன்...
நிச்சயம் நீ என் உடனில்லாத 
இரவாய்த்தானிருக்குமது.....!!!
மறு ஜென்மம் என்ற 
மாய பிம்பத்தை 
என் பகுத்தறிவு உடைக்கிறது.... 
இன்னொரு ஜென்மம் 
வேண்டும் என்ற ஆவல் 
அந்த பகுத்தறிவையே உடைக்கிறது... 
உன் மீதான என் காதல்..!!!
அகண்ட திரை தொலைக்காட்சி பெட்டியோ..
ஆளுயர கண்ணாடியுடன்
தேக்குமர பீரோவோ,
எட்டுக்கு ஆறு அளவிலான 
ஆளை விழுங்கத்தயாராய் 
மெத்தையுடன் கூடிய அகலக்கட்டிலோ
என் வீட்டை நிறைக்கவில்லை...
உனக்குப்பின் நம் வீடு காதலால் நிறைந்திருக்கிறது...!!!
ஒரு நீண்ட...கடவுள் மறுப்பு 
பிரசங்கத்திற்கு பிறகு.. 
ஏழு மைல் இருட்டில் 
பாட்டுகூட பாடாமல் 
சைக்கிளில் வந்து 
கட்டிலில் கால் நீட்டுகையில்
அனிச்சையாய் வாய் முனுமுனுக்கிறது.
" ஆண்டவனே.. அய்யனாரப்பா.."
அய்யனாருக்கும் எனக்குமான
உறவை தவிர்ப்பது அத்தனை எளிதல்ல...!!!











உன் மூச்சுக்காற்றின் 
வெப்பம் தாளாமல் 
உலர்ந்து விடப்போகிறது 
உதடுகள்..
கூரை வேய்ந்த 
என் உதடுகளோடு ஒட்டிவை.. 
நான் ஈரம் காயாமல் 
பாதுக்காப்பாய் 
வைத்துக்கொள்கிறேன்...!!!
காற்று போன பலூனாய்.. 
வரிகளோடு வற்றிப்போயிருக்கிறது வயிறு.. 
அபிக்கான உணவுதாங்கி 
வலி ஏற்று காத்திருக்கிறது தனங்கள்.. 
உணவு மறுக்கப்பட்டு 
உலர்ந்து வெடித்திருக்கிறது உதடுகள்..
நீர் தாங்கிய குளங்களாய்
ஏதோ சொல்லத்துடிக்கிறது கண்கள்..
மடியில் தலை தாங்கி தாயாகிறேன் நான்...!!!
பழரசம் தீர தீர... 
கோப்பை முத்தங்களால் 
நிறைந்து கொண்டிருக்கிறது...!!
வெளியில் போக போவதை 
நாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் 
நமக்கு முன்னால் 
மகிழ்ச்சியாய் தயாராகி விடுகிறது.. 
உன் செருப்பும்.. என் வாகனமும்...!

நீ பேருந்தில் ஏறுகிறாயா என
பார்த்துவந்து முன்கூட்டியே
தகவல் சொல்ல அனுப்பினால்..
உன் அருகில் அமர்ந்து கொண்டுதான்
திரும்ப வருகிறது மனசு...!!!
நீயோ..
கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு..!!
நானோ..
கொஞ்சம் கடவுள்
கொஞ்சம் மிருகம்..!!
கொஞ்சம் இரவிலும்
கொஞ்சம் பகலிலும்
முடிவெடுக்கலாம்..
எதை கொடுத்து எதை பெறுவதென..!!!
உன் உதடுகள் 
காய்வதற்காக காத்திருக்கிறோம் 
நானும் உன் நாக்கும்... 
யார் முந்துவது ஈரப்படுத்துவதற்கு..??
நீ.. என்னோடு
சண்டையிட்டுக்கொண்டே இரு... 
நான் எப்போதும் உன்னை 
ஜெயிக்கவைத்துக்கொண்டே 
இருப்பேன்...!!!
‎"அப்பா.. நானொரு கதை சொல்லவா.."
"ம்ம்.. சொல்லு..."
"ஒரு ஊர்ல ஒரு பாட்டி 
வடை சுட்டுச்சாம்.."
"ம்ம்... அப்புறம்..."
ஆர்வமாய் கேட்கிறேன்...
என் மகள் சொல்லும்
எந்த கதையும் எனக்கு புதிதுதானே...!!
ஒரு 
ஆழ்ந்த கனவின் 
நடுப்பகுதியில் தான் 
அலாரம் வீறிடுகிறது..!!!
‎"மூணாப்பு சாரு 
செம்ம அடி அடிப்பாரு.. 
நீங்கல்லாம் எப்படித்தான் 
படிக்க போறீங்களோ.. "
இரண்டாம் வகுப்பு 
படிக்கையில்
மூன்றாம் வகுப்பில் படித்த
சீனியரின் பயமுறுத்தல்கள்
இன்று வரை தொடர்கிறது...
ஆனாலும் தாண்டி வந்து
கொண்டிருக்கிறது வாழ்க்கை...!!!
எப்போதும் என் கூடவே இரு... 
நிச்சயமாய் எப்போதோ ஒரு நாள் 
நான் என்னை தொலைத்து விடுவேன்...
அடையாளம் சொல்லி 
புகார் கொடுக்க
உனையன்றி யாருளர் 
என்னை நன்றாய் அறிந்தவர்..??!!

நீ இல்லாத இரவுகளில்
என்னைப்போலவே
தனிமையில்
அழுதிருக்கிறது...
பனிக்கால ரோஜா..!

மிதித்து நடக்க
மனமின்றி விலகி நடக்கும்
காக்கை எறும்புகள்...
நீ பச்சரி மாவிலிட்ட கோலங்கள்..!!!!
தொடர்ந்து முயற்சிக்கிறேன்
ஒரு சரியான முத்தத்தை 
உன் இதழ்களில் 
இதழ்களால் எழுதி விட..!!
கைக்குட்டை..
திசுத்தாள்...
தேங்காய்ப்பூ துண்டு..
ம்ஹூம்... 
கையலம்பிய உடன்
உன் முந்தானை
தேடுகிறது மனசு..!!!.
இனிப்புக்கூடையை 
உன்னிடம் கொடுத்துவிட்டு 
தவமிருக்கிறேன்..
உன் உதட்டருகில் 
ஒட்டி இருக்கும் 
சிறு தூளுக்காக..!!!
"பிடிக்கவில்லை" என்று
 
நீ உதிர்க்கும் வார்த்தைகளையும்


ரசிக்கத்தான் தோன்றுகிறது.

..
உன் உதடுகளால் உச்சரிக்கும் போது..!!

நானொரு   நாட்டுப்புற  ரசிகன்... !!

நானொரு
நாட்டுப்புற
ரசிகன்...
ஓவியம் வரைகையில்
தடுக்கி கொட்டி விட்ட
வர்ணங்களை
தூரிகையால்
கலைத்து விட்டிருக்கும்
நவீன ஓவியங்கள்
எனக்கு புரியாது...

ஆண் பெண் குறிகளையும்
புணர்தலையும்
நேரடியாய் சொல்லிவிட்டு
இலக்கியமென
சூளுரைக்கும்
நவீன கவிதைகள்
எனக்கு புரிவதில்லை...

இதனைப்பார்த்து
இலக்கிய வியாதிகள்
நகைக்கக்கூடும்...
நகைக்கட்டுமே...
புரியாததை புரிவதாய்
என்னை நானே ஏமாற்றி
கைதட்டுவதை விட
நானொரு
நாட்டுப்புற ரசிகனாகவே
இருந்து விட்டு
போகிறேன்...
எனக்கான கவிதைகள்
எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கும்...
வானம்..
நிலா...
காற்று..
கடல்...
குதிரை என்று...!!!