நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 12 செப்டம்பர், 2012

செந்தமிழ் நாடென்னும் போதினிலே..
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..
--- மகா கவி சுப்பிரமணிய பாரதி 
"செந்தில் நாடு வா.." என மகள் சொல்லும் போதினிலே..
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..
-- மகா பாவி செந்தில் கே நடேசன்.

விளக்கடியில் ஒட்டி இருக்கும் 
துரத்த முடியா இருள் மாதிரி 
எல்லா காதலிலும் 
கொஞ்சம் காமம் 
இருக்கத்தான் செய்கிறது..

புதன், 5 செப்டம்பர், 2012

தூக்கிலிட்ட போதும் 
சந்தோஷமாய் 
சிரித்துக்கொண்டிருக்கின்றன.. 
தூக்கிலிடப்பட்டது 
உன் கூந்தலில் என்பதால்.. 

# மல்லிகை பூக்கள்..
காகிதம் 
காற்றில் பறந்து ஓடுகிறது.. 
பேனாவில் 
மை தீர்ந்து பல்லிளிக்கிறது.. 
பென்சில் முனை 
உடைந்து சிதறுகிறது.. 
ஆனாலும் எழுதுவோம்.. 
எழுதுகோலாய் எம் விரல்கள்.. 
காகிதமாய் பூமிப்பரப்பு.. 
இடையில் நிறுத்த 
இரண்டே காரணங்கள்தான் வேண்டும்..
ஒன்று எம் விரல்கள் ஓய வேண்டும்..
இல்லை
பூமி சுற்றுவதை நிறுத்தவேண்டும்!!!.
முரசுக்கட்டிலில் 
கண்ணயர்ந்த 
ஏழை புலவனின் 
துயில் காக்க 
சாமரம் வீசிய அரசன்.. 
இது சங்க இலக்கியம்.. 

தன்மீது துயிலும் மகளை 
தட்டிக்கொடுத்து ரசிக்கும் நான்.. ... 
இது தந்தை இலக்கியம்..!!!
பட்டாம்பூச்சியை 
அலகிடை கவ்வி 
சாரளத்தின் வழி நுழைந்து 
கீற்றுக்குடிசையின் 
மோட்டிலிருந்து தொங்கும் 
கயிற்றில் கட்டிய சிறு கூடுநோக்கி 
விர்ர்ரென சிறகடிக்கும் 
சிட்டுக்குருவியாய் 
பறந்து வருகிறது மனசு.. 
உன்னை பார்த்த சந்தோஷத்தில்..

வேகமாய் கடந்து சென்ற
வாகனமேற்படுத்தும்
வெற்றிடம் நிரப்ப
காற்றோடு சேர்ந்து
ஓடிவரும்
குப்பைகளாய்
கூடவே காமமும்..!!!

சனி, 1 செப்டம்பர், 2012


தவற விட்ட அழைப்புகள் 
ஒவ்வொரு நேரத்திற்கும் 
ஒவ்வொரு கேள்வியை சுமந்து வருகின்றன.. 
விடிகாலையில் ..
"இன்னும் தூங்குறீங்களா.." 
உச்சி வெயிலில் " சாப்டீங்களா..? "
மாலை பொழுதில்.. 
"ரூம்க்கு போயாச்சா..." 
ஊரடங்கும் வேளையில் ... 
"தூக்கம் வரலடா.." 
தவறவிட்ட அழைப்புகள் 
தாங்கி வரும் 
ஒவ்வொரு கேள்விக்கும் 
அதே தவறவிட சொல்லிக்கொடுக்கப்பட்ட 
அழைப்புகளாலேயே 
பதிலும் சொல்ல பழகி இருக்கிறோம்.. 
மிஸ்டு கால்களால் 
மிஸ்ஸான வாழ்க்கையை 
வாழ்ந்து விடும் வெறி 
கண்களில் நிலழாட 
தூங்கிப்போகிறோம்.. 
விடியட்டும்,... 
இன்னொரு மிஸ்டு கால் வரும்..!!!