நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ராட்சஷிகளை 
அழகிகளாக்கி ரசிக்கவும்.. 
பைத்தியக்கார பட்டத்தை கேட்டு 
(லூசாடா நீ..?)
புளங்காகிதமடையவும் 
காதல்தான் கற்றுத்தருகிறது.. !!!
அடுக்கு மாடி குடியிருப்பில் 
எங்கள் குழந்தைகளுக்கு 
வானமே அன்னியமாயிருகும் போது 
அடம்பிடிக்கும் குழந்தைக்கு 
காட்டி சோறூட்ட  
நிலாவிற்கு 
நாங்கள் எங்கே போவோம்..!!!

புதன், 29 ஆகஸ்ட், 2012

விளக்கை அணைப்பதற்காக 
வாயிலில் காத்து நிற்கிறது 
தீர்ந்து விடும் இரவுகளும் 
தீரா கனவும்.. 
விளக்கை அணைத்துவிட்டு, 
என்னை அவைகளுக்காக 
படுக்கையில் கிடத்திவிட்டு 
வெளியேறுகிறேன்.. 
உன்னிடம் பேச 
இன்று நிறைய இருக்கிறது..!!!

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

குருதி கசிந்த 
இதயம் நக்கி 
ருசிகண்ட காதல் பூனை 
இன்னுமொரு துளிக்காய் 
காத்திருக்கிறது...
வாசனை பிடித்த மூக்கை 
நாவால் துழாவியபடி.. 
உன் கத்தியை இன்னொரு முறை 
ஆழமாய் இறக்கு.. 
பூனைக்காவது உன்னால் 
உபயோகமிருக்கட்டும்..!!!

என் அஸ்வமேதயாக குதிரை 
உன் வீட்டு கொட்டடியில் 
உறங்கி கிடக்கிறது.. 
மீட்டுச்செல்ல வந்த என்னையும் 
கண்களால் 
கைது செய்திருக்கிறாய்.. 
ஆனால்...
ஆள்வதற்கு 
எனக்கு இப்போதுதான் 
புதிய ராஜ்ஜியம் கிடைத்திருக்கிறது..!!!
ஓட்டிலிருந்து 
வெளிவரமுயற்சிக்கும் 
நத்தையின் 
உணர்கொம்புகளை தீண்டும் 
விரலாய் உன் நினைவுகள்.. 
மீண்டும் நான் முடங்குகிறேன்...!!!