நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 11 மார்ச், 2012

முழங்காலை 
எட்டத்துடிக்கும் 
புழுதிப்படிவோடு ,அம்மா 
"எங்கடா போய் ஆடிட்டு வர " என்று 
செல்லமாய் அடிக்க 
கை ஓங்குகையில் 
ஓடிவந்து முழங்காலை 
கட்டிப்பிடித்து 
முகம் புதைத்த 
புடவை வாசம்... 

அரை குறை 
தூக்கத்தினூடே 
"உம" கொட்டியபடி 
கதையோடு சுவாசித்த 
அப்பாவின் 
வெற்றிலைச்சாறு நெடி கலந்த 
வியர்வை வாசம்... 

பின்னாளில் 
கொஞ்ச வசதி வந்ததும் 
தாலிக்கொடியை 
தங்கச்செயினாய் 
மனைவி மாற்றியதில் இழந்த 
மஞ்சள் மனம் கலந்த 
பின்கழுத்து வாசம்.. 

ஜான்சன் பவுடரும் 
மேரி பிஸ்கெட்டுமாய்  
அபிகுட்டி 
முகத்தில் உமிழ்ந்த 
எச்சில் வாசம்... 

குளிர்பதன அறையில் 
பணியமர்ந்த பின் 
பாடி ஸ்ப்ரே களவாடிய 
எனக்கே உரித்தான 
சொந்த வாசம்...  

உயர உயர தொலைந்தது 
வாசனைகள்   மட்டுமா... 
வாழ்க்கையும்தான்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக