
இடுப்பில்
நிறை குடத்துடன்
மற்றொரு கையில்
நீரை அள்ளி அள்ளி
சாலையில் ஓவியம் வரைந்தபடி
நடக்கும் பேரிளம் பெண்ணோ...
நுங்கு குடுக்கையில்
சிகரெட் அட்டையை மடித்து
ஆணி அடித்து
புல்லட் சத்தமெழுப்பிய படி
ஒற்றைக்கையால்
கால்சட்டையை பிடித்துக்கொண்டு
குறுக்குவழி ஓடும் சிறுவனோ...
குப்பைதொட்டிக்கு
வெளியில் வீசிச்சென்றவர்களின்
முன்னோர்களை எல்லாம்
தோண்டி எடுத்து
திட்டி திருப்தி அடையும்
துப்புரவு தொழிலாளியின் கோபமோ..
கண்டக்டரின் விசிலை தொடர்ந்து
நின்ற பேருந்தின்
முன்னிருக்கையில் உதயமான தேவதை
விசிறிச்சென்ற துப்பட்டாவின் நுனி தழுவலோ...
யாரோ.. அல்லது ஏதோ ஒன்று
பற்றவைத்துக்கொண்டுதான் இருக்கிறது
கவிதைக்கான தீப்பொறியை... !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக